ஒரு தமிழ்க் குடும்பத்திற்காக போராடும் ஆஸ்திரேலிய மக்கள்…

ஒரு தமிழ்க் குடும்பத்திற்காக ஆஸ்திரேலிய விமானம் நடுவானில் திருப்பப்பட்டதும், ஆஸ்திரேலிய மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடுவதும் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.

ஆஸ்திரேலிய நாடு கடந்த சில ஆண்டுகளாக அங்குக் குடியேற வரும் மக்களைப் பெருமளவில் திருப்பி அனுப்பி வருகின்றது. இதனால் போரில் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் இன்னும் அதிக பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.ஈழத் தமிழர் நடேசலிங்கமும் அவரின் மனைவி பிரியாவும் 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் அகதிகளாக வந்தனர். இவர்கள் இருவரும் மெல்போர்னில் உள்ள அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இந்தத் தம்பதிகளுக்கு ஆஸ்திரேலியாவில் கோபிகா, தருணிகா என்று இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். 

இந்நிலையில், இந்தத் தம்பதிகளுக்கு வழங்கப்பட்ட தற்காலிக விசாவின் காலம் முடிந்துவிட்டதால், அவர்களை மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்ப கனடாவின் அரசு கடந்த வாரம் உத்தரவிட்டது. இதில் நடேசலிங்கம் பிரியா ஆகியோருக்கு இலங்கையில் குடியுரிமை உள்ளது. ஆனால் அவர்களின் 4 மற்றும் 2 வயதுடைய மகள்களுக்கு இலங்கை, ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு நாடுகளிலுமே குடியுரிமைகள் இல்லை. அவர்கள் நாடற்றவர்களாகவே கருதப்படுகின்றனர். இவர்கள் கடந்த வியாழன் அன்று விமானத்தில் ஏற்றப்பட்ட அதேநேரம், தமிழர்கள் இது குறித்து ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும் விசாரணைக்கு வந்தது.

அந்நேரம் நடேசன் குடும்பத்தினர் ஏற்றப்பட்ட விமானம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட, நீதிபதி ஹீதர் ரிலே உடனடியாக உத்தரவிட்டு அந்த விமானத்தை நடுவழியில் மீண்டும் திரும்பி ஆஸ்திரேலியா வரச் செய்தார். அவர்களை நாடு கடத்தத் தடையும் விதித்தார்.

தற்போது ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவின் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நடேசன் குடும்பத்தினருக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய அரசியல் கட்சிகள் பலவும் கருத்து தெரிவித்துவரும் நிலையில், ஆஸ்திரேலிய மக்களும் மெல்போர்ன், சிட்னி, கான்பெரேரா, அடிலெய்ட் ஆகிய நகரங்களில் நடேசன் குடும்பத்தினருக்கு ஆதரவாக நேற்று பதாகைகளை ஏந்திப் பேரணிகளை நடத்தினர்.

ஒரு தமிழ்க் குடும்பத்திற்காக ஆஸ்திரேலிய நீதித்துறையும், அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் போராடும் சம்பவம் உலக அரசியலின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது. குடியேற்றத்தில் பல கடினமான முடிவுகளை மேற்கொண்டுவரும் ஆஸ்திரேலிய கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சி, நடேச லிங்கம் குடும்பத்தினர் விவகாரத்தில் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்பதுதான் உலகத் தமிழர்களின் விருப்பமாக உள்ளது.

Exit mobile version