ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் : செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

ஆஸ்திரேலியா ஓபன் காலிறுதி சுற்றில், பிரபல வீராங்கனையான அமெரிக்காவின் செனீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வியடைந்தார். மெல்போர்னில் நடைபெற்று வரும், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பெண்கள் காலிறுதி சுற்றில் நடந்த போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தர வரிசையில் 7 ஆம் நிலை வீராங்கனையும் செக் குடியரசை சேர்ந்தவருமான கரோலினா ப்ளிஸ்கோவாவை எதிர்கொண்டார்.

முதல் செட்டை ப்ளிஸ்கோவா 6 க்கு 4 என்ற கணக்கில் கைப்பற்றியதையடுத்து, 6 க்கு 4 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை செரீனா கைப்பற்றினார். இதனையடுத்து பரபரப்பான 3 வது செட்டை 7 க்கு 5 என்ற கணக்கில் ப்ளிஸ்கோவா மீண்டும் கைப்பற்றியதை அடுத்து, செரினா அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்றில் நடந்த போட்டியில், ஃப்ரான்ஸின் பியரி ஹூகியூஸ் ஹெர்பர்ட் (Pierre Hugues Herbert) , நிகோலஸ் மகுட் இணை, அமெரிக்காவின் மைக் ப்ரையன், பாப் ப்ரையன் இணையை 6 க்கு 4, 7 க்கு 6, என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் அமெரிக்காவின் சாம் கியூரே, ரியான் ஹாரிசன் இணையை எதிர் கொள்ள உள்ளது.

ஆண்கள் இரட்டையை பிரிவின் காலிறுதி சுற்றில் இங்கிலாந்தின் ஜமி முர்ரே, ப்ரேசிலின் ப்ரூனோ சோரஸ் இணையை ஃபின்லாந்தின் ஹென்றி கோண்டினன், ஆஸ்திரேலியாவின் ஜான் பீர்ஸ் இணை 6க்கு 3, 6 க்கு 4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தியது. இதன் மூலம் காலிறுதியில் வெற்றி பெற்ற முன்னேறிய ஹென்றி கோண்டினன், ஜான் பீர்ஸ் இணை அரையிறுதியில், அர்ஜெண்டினாவின் லியானார்டோ மேயர், போர்சுகலின் ஜோவாவ் சவுசா இணையை எதிர்கொள்கிறது.

ஆஸ்திரேலியா ஓபன் பெண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில், அமெரிக்காவின் ஜெனிஃபர் ப்ராடி, அலிசன் ரிஸ்கி இணை ஃப்ரான்ஸின் கிறிஸ்டினா மிலாடெனோவ், ஹங்கேரியின் டிமியா பபூஸ் இணையை எதிர்கொண்டது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிறிஸ்டினா மிலாடெனோவ், டிமியா பபூஸ் இணை 6 க்கு 4, 6 க்கு 2 என்ற நேர் செட் கணக்கில் ஜெனிஃபர் ப்ராடி, அலிசன் ரிஸ்கி இணையை வீழ்த்தியது. இதன் மூலம் பெண்கள் இரட்டையரில் கிறிஸ்டினா மிலாடெனோவ், டிமியா பபூஸ் இணை முதல் போட்டியாளராக இறுதி போட்டிக்கு முன்னேறியது.

Exit mobile version