இந்தியாவுக் எதிரான 4வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சண்டிகாரில் நடைபெற்றது. இப்போட்டியில் தோனிக்கு ஓய்வளிக்கப்பட்டு ரிஷப்பண்ட் களம் இறக்கப்பட்டார். டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஜோடியாக களம் இறங்கிய ரோஹித் ஷர்மா, தவான் இணை சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். முதல் விக்கெட்டுக்கு 193 ரன்கள் சேர்த்த இந்த இணை ஒரு நாள் போட்டிகளில் ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய துவக்க ஆட்டக்காரர்கள் என்ற சிறப்பை பெற்றனர். ரோஹித் 95 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய தாவான் 143 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்ததையடுத்து 50 ஓவர்களில் இந்திய அணி 358 ரன்கள் குவித்தது.
359 ரன்கள் எடுத்தால், வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா, இந்திய வீரர்களின் பந்து வீச்சை திறம்பட எதிர்கொண்டு ரன்களை திரட்டியது. உஸ்மான் கவாஜா 91 ரன்களும் பீட்டர் ஹாண்ட்ஸ்கம்ப் 117 ரன்களும் குவித்தனர். இறுதி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய அஷ்டன் டர்னர் 43 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 84 ரன்கள் குவித்தார். முடிவில் ஆஸ்திரேலியா 47 புள்ளி 5 ஓவர்களில் 359 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 2 க்கு 2 என சம நிலை ஆனது. இறுதி கட்டத்தில் அதிரடியாக ஆடி வெற்றிக்கு வழி வகுத்த அஷ்டன் டர்னர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் 5 வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லியில் 13 ஆம் தேதி நடைபெற உள்ளது.