பெர்த் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் சமநிலை பெற்றுள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பெர்த்தில் 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 326 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய அணி 283 ரன்கள் எடுத்தது. 2-வது இன்னிங்சை ஆடிய அஸ்திரேலியா 243 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது.
தொடக்க ஆட்டக்காரர் ராகுல் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். புஜாரா 4 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். கடந்த இன்னிங்ஸில் சிறப்பாக ஆடி சதம் விளாசிய கேப்டன் கோலி இந்த இன்னிங்ஸில் 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இன்றைய ஆட்டத்தில் நிதானமாக ஆடி வந்த ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் கூட்டணி கலைந்த உடன், விக்கெட்டுகள் மளமளவென சரிந்து 140 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இந்தியா.
நாதன் லயான், ஸ்டார்க் சிறப்பாக பந்து வீசி தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பெர்த் டெஸ்ட் போட்டியின் வெற்றி மூலம் ஆஸ்திரேலியா தொடரில் சமநிலை பெற்றுள்ளது.