ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் போட்டியில், இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் போட்டி, 4 டெஸ்ட் போட்டி, மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இதில் பிரிஸ்பேனில் நடந்த முதல் 20 ஓவர் போட்டியில், டாஸ் வென்ற இந்தியா, பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை குறுக்கிட்டதை தொடர்ந்து, ஆட்டம் 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதன்படி, பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி, 17 ஓவர்களில், நான்கு விக்கெட்டுகளை இழந்து, 158 ரன்களை குவித்தது.
அதிகபட்சமாக கிளென் மேக்ஸ்வெல் 24 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து டக்வெர்த் லீவிஸ் விதிப்படி இந்தியாவிற்கு 17 ஓவரில் 174 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் தவான், அதிரடியாக ஆடி 42 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார்.
இதன் பிறகு சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, 17 ஓவர்களில், 7 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. பரபரப்பான இப்போட்டியில், இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.