ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், 251 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கும் இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடைபெற்று வந்தது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 284 ரன்களும், இங்கிலாந்து 374 ரன்களும் எடுத்தன. 90 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா, 487 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, ரன் சேர்க்க திணறியது. ஆஸ்திரேலிய அணி வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
இறுதியில் 146 ரன்களுக்கு இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து, 251 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1க்கு 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.