உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான 26 வது லீக் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 382 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் 26 வது லீக் போட்டியில், ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, மஷ்ரஃபி மோர்தாஸா தலைமையிலான வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. நாட்டிங்காமில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் ஃபின்ச் 53 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து நிலைத்து நின்று ஆடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர், 147 பந்துகளில் 5 சிக்சர் 14 பவுண்டரியுடன் 166 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
நடப்பு தொடரில் தனிநபர் அதிகபட்ச ரன்னை பதிவு செய்ததுடன், இந்த உலக கோப்பையில் 447 ரன்கள் எடுத்து அதிக ரன் குவித்த வீரரானார். தொடர்ந்து சதத்தை நெருங்கி வந்த உஸ்மான் கவாஜா 89 ரன்னிலும் மேக்ஸ்வெல் 32 ரன்னிலும் ஆட்டமிழக்க பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவன் ஸ்மித் 1 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 49 ஓவர்கள் முடிவில் மழையால் தடைபட்ட ஆட்டம் மீண்டும் தொடங்கியது. எஞ்சிய ஒரு ஓவரில் 13 ரன்கள் எடுக்கப்பட்டது. 50 ஓவர்கள் முடிவில், 5விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா 381 ரன்கள் குவித்தது. இதனால் வங்கதேசத்திற்கு 382 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது