ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை வீழ்த்திய ஜப்பானின் நவோமி ஒசக்கா அரையிறுதிக்கு முன்னேறினார். மெல்போர்னில் நடைபெறும் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிப் போட்டியில், உலக தரவரிசையில் 4 ஆம் நிலை வீராங்கனையும் ஜப்பானை சேர்ந்தவருமான நவோமி ஒசக்கா, 6 நிலை வீராங்கனையும் உக்ரைனை சேர்ந்தவருமான எலினா ஸ்விடோலினா மோதிய போட்டி நடைபெற்றது.
முக்கிய வீராங்கனைகள் மோதுவதால் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே இப்போட்டி தொடங்கியது. ஒரு மணி நேரம் 12 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில், தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒசக்கா 6 க்கு 4, 6 க்கு 1 என்ற நேர் செட் கணக்கில் ஸ்விடோலினாவை எளிதில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.