உச்சநீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி, ஆணையத்தில் ஆஜராகாத அப்போலோ மருத்துவர்கள் மற்றும் நிர்வாகிகள், நாளை மதியம் 2மணிக்குள் உரிய விளக்கம் அளிக்க ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்துவரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன், அப்போலோ மருத்துவர்கள் மற்றும் நிர்வாகிகள், விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பல்லோ நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், ஆணைய விசாரணைக்கு தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து, அப்பல்லோ நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
முன்னதாக, சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பையடுத்து, 25 ம் தேதி அப்போலோ மருத்துவர்கள் மற்றும் கேஷியர் மோகன் ரெட்டியை, ஆணையத்தில் ஆஜராகுமாறு நீதிபதி ஆறுமுகசாமி உத்திரவிட்டார். ஆனால், உச்சநீதிமன்ற முறையீட்டை காரணம் காட்டி, இன்று அவர்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து, இந்த விவகாரத்தில் நாளை மதியம் 2 மணிக்குள் உரிய விளக்கம் அளிக்க நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவிட்டுள்ளார்.