ஆகஸ்ட் 29ஆம் தேதி தேசிய விளையாட்டு தினம்!

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29ஆம் தேதி, தேசிய விளையாட்டு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளை தேர்ந்தெடுக்க காரணம் என்ன? இந்திய விளையாட்டுத் துறை எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? 1905-ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் பிறந்தவர் தயான் சாந்த். பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றிய தந்தை ஒரு ஹாக்கி வீரர் என்பதால் சிறுவயதிலேயே ஹாக்கி விளையாட்டில் ஈடுபட்டார் தயான் சிங். இரவு நேரங்களில் நிலவு வெளிச்சத்தில் ஹாக்கி பயிற்சி மேற்கொண்டதால் சாந்த் என்பது அவரது பெயருடன் ஒட்டிக் கொண்டு தயான் சாந்த் ஆனார். பிரிட்டிஷ் இந்தியா ஹாக்கி அணிக்காக 1928, 1932, 1936 ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டார் தயான் சந்த். அந்த போட்டிகளில் இந்திய அணி தங்கப்பதக்கம் வெற்றி பெற காரணமாக அமைந்தார் தயான் சாந்த். இவரது ஆட்டத்திறனைப் பார்த்து மாயாவி என்று அழைக்கப்பட்டார் தயான் சாந்த். ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லரால் வியந்து பார்க்கப்பட்ட வீரர் என்ற சிறப்பும் தயான் சாந்துக்கு உண்டு. 1926 முதல் 1949 வரை இந்தியாவுக்காக விளையாடிய இவர், 185 ஆட்டங்களில் 570 கோல்களை அடித்துள்ளார். இவரது சிறப்பான பங்களிப்பை பாராட்டி 1956-ம் ஆண்டு பத்மபூஷன் அறிவிக்கப்பட்டது. 1979 டிசம்பர் மாதம் 3ஆம் தேதி மறைந்த அவர், இந்தியா உருவாக்கிய மாபெரும் வீரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2012ஆம் ஆண்டு முதல் தயான் சாந்த் பிறந்த ஆகஸ்ட் 29-ந் தேதியை தேசிய விளையாட்டு தினமாக மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. அன்றைய தினம் விளையாட்டில் சாதித்த வீரர்களுக்கு விருதும் வழங்கப்படுகிறது.

ஆனால் தயான் சாந்த் மறைவுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டிகளிலோ, சர்வதேச போட்டிகளிலோ பதக்கங்கள் குவிக்க இந்தியா தடுமாறி வருகிறது. கிரிக்கெட்டிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் பிற விளையாட்டுக்களுக்கு இந்தியாவில் கொடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் இங்கு உண்டு. சமீபகாலமாகத் தான் குத்துச்சண்டை, மல்யுத்தம், இறகுப் பந்து போன்ற விளையாட்டுக்கள் கவனம் பெறுகின்றன. விளையாட்டு தினத்தன்று மட்டும் விளையாட்டு பற்றி பேசினால் போதாது, படிப்புக்கு கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் விளையாட்டிற்கும் கொடுக்கப்பட்டால் தான் இந்தியா சர்வதேச அளவில் விளையாட்டில் பதக்கங்கள் குவிக்கும் என்பதே உண்மை.

Exit mobile version