பொலிவிழந்த ஆடி அமாவாசை : முக்கடல் சங்கமிக்கும் குமரி கடற்கரை வெறிச்சோடியது!

ஆடி அமாவாசையான இன்று, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர்நிலைகளில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டதால், முக்கிய இடங்கள் வெறிச்சோடின.

ஆடி அமாவாசையையொட்டி சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளக்கரையில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். வழக்கத்தை விட குறைவான அளவிலேயே பொதுமக்கள் வந்த போதிலும், அவர்களை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றுமாறு அவ்வப்போது காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மக்கள் கூட தடைவிதிக்கப்பட்டு உள்ளதால் ஆடி அமாவாசை நாளில் வழக்கமாக கூட்டமாக காணப்படும் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை, வெறிச்சோடி காணப்பட்டது. கடற்கரை பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர்.

முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரையில் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதி வெறிச்சோடி காட்சியளித்தது. ஆடி அமாவாசை நாளான இன்று கடற்கரை, திருவேணி சங்கமம், சங்கலி துறை 16 கால் மண்டபம் உள்ளிட்ட புனித நீராடும் முக்கடல் பகுதிகள் வெறிச் சோடின.

தேனி மாவட்டம் சுருளி அருவியில் ஆடி அமாவாசையையொட்டி பக்தர்கள் தர்ப்பணம் செய்வதற்கு வர வேண்டாம் என காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் கேட்டுக்கொண்டனர். இதனால் அருவிப் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அதிகாலை முதல் வரத்தொடங்கிய பக்தர்கள், தெப்பகுளம், பைரவர் கோயில் கடற்கரை, சுப்பிரமணியசுவாமி கோயில் நுழைவுவாயிலில் திரண்டனர். ஊரடங்கு அமலில் இருப்பதால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பக்தர்களை திருப்பி அனுப்பியதால் அவர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

கும்பகோணம் மகாமக குளம் மற்றும் காவிரி படித்துறைகளில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டதால் வழக்கமாக ஆடி அமாவாசை நாளில் கூட்டம் அலைமோதும் பகுதிகள் இன்று வெறிச்சோடி காணப்பட்டன. காவிரி படித்துறைகளில் மக்கள் கூடுவதை தடுக்கும் வகையில் காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேட்டூர் காவிரி ஆற்றங்கரையில் குறைந்தளவு மக்களே வந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். வழக்கமாக ஆடி அமாவாசை நாளில் சேலம், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வருவர். தடை உத்தரவு காரணமாக உள்ளூர் மக்கள் சிலர் மட்டுமே வந்திருந்து காவிரியில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

கோவை நொய்யல் ஆற்று படித்துறையில் ஆடி அமாவாசை வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டதால் பொதுமக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. நொய்யல் படித்துறை ஆற்றங்கரை விநாயகர் சன்னதி, ஏழு கன்னிமார் கோயில் பகுதிகள் வெறிச்சோடின. படித்துறை மற்றும் கோயிலை சுற்றி நாலாபுறமும் கயிறு மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. பக்தர்கள் கூட்டம் குறைந்து காணப்பட்ட நிலையில், ஒரு சில பக்தர்கள் மட்டும் தங்களது குடும்பத்துடன் பேரூர் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். ஒருபுறம் ஆடி அமாவாசை பொலிவிழந்த போதிலும், மக்கள் ஊரடங்கு உத்தரவை மதித்து வீடுகளிலேயே தர்ப்பணம் கொடுத்தனர்.

Exit mobile version