கவனம்… உங்கள் பேச்சை ஒட்டுக் கேட்கிறது கூகுள்

இணைய யுகத்தில் எங்கும் பரவியுள்ள கூகுள் நிறுவனம் தனது சேவைகள் மூலம் வாடிக்கையாளர்களின் பேச்சை ஒட்டுக் கேட்கிறது – என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உலக அளவில் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ள கூகுள் மீதான குற்றச்சாட்டு குறித்து விரிவாகப் பார்ப்போம்.

கூகுள் தேடுபொறி என்பது தற்போது ஒரு மிகப்பெரிய நிறுவனமாக தற்போது வளர்ந்துள்ளது. அதில் யூ டியூப், ஜிமெயில், வாய்ஸ் அசிஸ்டண்ட் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன. கூகுளின் சேவைகளை பயனாளி ஒருவர் தனது கணினியில் இருந்தோ கைபேசியில் இருந்தோ பயன்படுத்தும் போது, அவரது சாதனத்தில் உள்ள கேமரா மற்றும் ஒலிப்பதிவு சாதனத்தின் முழுக் கட்டுப்பாடும் கூகுளிடம் சென்று விடுகின்றது.

இந்நிலையில், கூகுள் தனது வாடிக்கையாளர்கள் தங்கள் வீடுகளில் பேசிக் கொள்வதை வாய்ஸ் அசிண்டண்ட் மூலம் அவர்களுக்குத் தெரியாமல் ஒலிப் பதிவு செய்து, தன்னோடு இணைந்து இயங்கும் ஒப்பந்த நிறுவனங்களுக்கு அவற்றை அனுப்பி வைக்கின்றது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. 

பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த வி.ஆர்.டி. நியூஸ் – என்ற செய்தி நிறுவனம் இது குறித்த செய்தியை வெளியிட்டு உள்ளது. அந்த செய்தியில், கூகுள் அசிஸ்டண்ட் சேவை மூலம் ஒலிப்பதிவு செய்யப்பட்டு, கூகுளால் தனது ஒப்பந்த நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட ஆயிரம் ஒலிப் பதிவுகள் ஆதாரங்களாகக் காட்டப்பட்டு உள்ளன. இந்த ஆதாரங்கள் உண்மையை வெளிப்படுத்த விரும்பிய ஒருவரால் அந்த நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டவை ஆகும்.

இந்த ஒலிப் பதிவுகளில் சிலவற்றில் முகவரி, வங்கி எண் போன்ற முக்கிய விவரங்கள் உள்ளன. சிலவற்றில் கணவன் மனைவி சண்டை பதிவாகி உள்ளது. சிலவற்றில் பாலியல் இணைய தளம் குறித்த தேடல்கள் உள்ளன. ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலில் உள்ள போது உதவி கேட்கும் ஒலிப்பதிவு கூட இதில் உள்ளது. இந்த ஆயிரம் ஒலிப்பதிவுகளில் 153 ஒலிப்பதிவுகள் கூகுள் சேவையை பயனாளி இயக்காத நிலையில் தன்னிச்சையாகப் பதிவானவை என்பது கூடுதல் அதிர்ச்சி.

இந்த செய்தி வெளியாகும் வரை மக்களின் சாதனங்களில் இருந்து ஒலிப்பதிவுகளைத் திருடுவது குறித்து ஒன்றுமே சொல்லாத கூகுள் நிறுவனம் இப்போது, ‘நாங்கள் 0.2% ஒலிப்பதிவுகளை மட்டுமே எடுத்தோம். அவை குரலை அடையாளம் காணும் சேவையை மேம்படுத்த என்று மட்டுமே எடுக்கப்பட்டன’ – என்று விளக்கம் அளித்து உள்ளது.

வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் அவர்களை வேவு பார்த்தது, வாடிக்கையாளர்களின் தகவல்கள் அடங்கில ஒலிப் பதிவுகளைத் திருடியது, திருடிய தகவல்களை தனக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு அளித்தது, அந்த ஒலிப்பதிவுகள் வெளியேறும் அளவுக்கு அலட்சியமாக இருந்தது – ஆகிய குற்றங்களை கூகுள் இழைத்துள்ளதாக ஐரோப்பிய ஊடகங்கள் கூகுள் மீது குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமேசான் அலெக்ஸாவின் ‘எக்கோ’ வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையானது இதே போன்ற ஒலிப்பதிவு திருட்டில் ஈடுபடுவதாக புளூம்பெர்க் ஊடக நிறுவனத்தால் குற்றம்சாட்டப்பட்டது, இப்போது அந்தப் பட்டியலில் உலகப் புகழ்பெற்ற கூகுளும் இணைந்துள்ளது.

அந்தரங்கங்களைத் திருடும் ஹேக்கர்களைப் போலவே, இணைய சேவை நிறுவனங்கள் நடந்து கொள்வது இணையப் பயன்பாட்டாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளன. 

 

Exit mobile version