மானாமதுரையில் அ.ம.மு.க நிர்வாகி கொலைக்கு பழிவாங்க கொலை முயற்சி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள கனரா வங்கிக் கிளையின் காவலாளி, பாதுகாப்பு கருதி கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர்கள் மீது, துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அ.ம.மு.க நிர்வாகி சரவணன் கடந்த மே மாதம் 26-ம் தேதி நடைப்பயிற்சியின்போது மானாமதுரையில் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைக்கு பழிக்குப்பழியாக தங்கமணி என்பவரை மானாமதுரையில் கொலை செய்ய தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 6 பேர் விரட்டியுள்ளனர். தங்கமணியுடன் அவரின் நண்பர் கணேஷ் என்பவர் உடன் இருந்துள்ளார். அவர்கள் ஆயுதங்களை வைத்து தாங்கியதில் தங்கமணி மற்றும் கணேசனுக்கும் ரத்த காயங்கள் ஏற்பட்டன.

உயிருக்கு பயந்து தங்கமணி அருகே இருந்த கனரா வங்கிக்குள் நுழைந்தார். வங்கிக்கு உள்ளே சென்று கொலை செய்ய தமிழ்ச்செல்வன் முயன்றிருக்கிறார். அப்போது வங்கியில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாவலர் செல்வநேரு பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் ஆயுதங்களுடன் மற்றவர்களைத் தாக்க முயல வேண்டாம் என எச்சரிக்கை செய்திருக்கிறார். ஆனால், அவரது எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் தமிழ்ச்செல்வன், தங்கமணியைத் தாக்க முயன்றதாகத் தெரிகிறது. இதையடுத்து, வங்கி பாதுகாவலர் செல்வநேரு தமிழ்ச்செல்வனை காலில் சுட்டார்.

இதனால் பலத்த காயத்துடன் தமிழ்ச்செல்வன் அங்கேயே விழுந்தார். இந்தச் சம்பவம் வங்கியில் கூடியிருந்த பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை அதிகாரிகள் தங்கமணி மற்றும் கணேசனை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துப்பாக்கிசூட்டில் காயமடைந்த தமிழ்ச்செல்வனையும் காவல்துரையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து மானாமதுரை டி.எஸ்.பி கார்த்திகேயன் விசாரணை நடத்திவருகிறார். கொலை முயற்சில் ஈடுபட்ட தமிழ்ச்செல்வன் பிடிபட்ட நிலையில் அவருடன் வந்த 5 பேரை மானாமதுரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

Exit mobile version