2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் களம் காணும் தமிழக நட்சத்திரங்கள்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23ஆம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ள 2020 ஒலிம்பிக் போட்டியில்,

இந்திய அணியில் இடம் பெற்றுள்ள தமிழக வீரர்கள் யார் யார் என்பதை விவரிக்கிறது, இந்த செய்தித் தொகுப்பு

 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23ம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது ஒலிம்பிக் போட்டி…….18 விளையாட்டுப் போட்டிகளில், 115 வீரர், வீராங்கனைகள் இந்தியா சார்பில் பங்கேற்க உள்ள நிலையில், தமிழ்நாட்டில் இருந்து 8 பேர் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.

2018ஆம் ஆண்டு இந்தோனேஷியாவின் ஜகர்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில், தங்கம், வெள்ளி என இரு பதக்கங்களை வென்ற தடகள வீரர் ராஜிவ் ஆரோக்கியா, 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற ராஜிவ் ஆரோக்யா, இரண்டாவது முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறார்.

டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் பங்கேற்க உள்ள சரத் கமல், 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் தொடங்கி, நான்காவது முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக இந்தியாவுக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல், நடப்பு தேசிய சாம்பியனான சத்திய ஞானசேகரன், ஆடவர் ஒற்றையர் பிரிவில் களம் இறங்குகிறார்.

9 முறை தேசிய சாம்பியனான சரத் கமலை வீழ்த்தி, சத்திய ஞானசேகரன் தேசிய சாம்பியன் ஆனது குறிப்பிடத்தக்கது.

பாய்மரப்படகுப் போட்டியில், FORTY NINER பிரிவில் வருண் அஷோக் தாக்கர், கே.சி.கணபதி ஆகியோர் பங்கேற்கின்றனர். FORTY NINER என்பது இருவர் பங்கேற்கும் போட்டி. அதற்கேற்றார்போல் படகும் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

முசானா ஆசியா மற்றும் ஆப்ரிக்கா ஒலிம்பிக் தகுதிப் போட்டியில் பங்கேற்ற வருண் அஷோக் தாக்கர், கே.சி.கணபதி ஆகியோர், 2020 ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல், மகளிர் லேசர் ரேடியல் பிரிவில், நேத்ரா குமணன் தங்கத்தை வெல்ல காத்திருக்கிறார். கடந்த 2014 மற்றும் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இவர் பங்கேற்றார்.

2020ஆம் ஆண்டு நடைபெற்ற உலக பாய்மரப்படகுப் போட்டியில், வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றி சாதனைப் படைத்தார். உலக அளவிலான போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் இவர் என்பது, தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.

FENCING எனும் வாள்சண்டைப் போட்டிக்கான அணியில், பவானி தேவி இடம் பெற்றுள்ளார். கடந்த ஏப்ரல் மாதத்தின்படி, உலக தரவரிசையில் 42வது இடத்தை பிடித்ததை அடுத்து, ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார், பவானி தேவி. வாள் சண்டைப் போட்டியில், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள முதல் இந்தியப் பெண்மணியும் இவரே.

துப்பாக்கி சுடுதல் போட்டியில், இளம் வீராங்கனை இளவேனில் வாலறிவன் 10 மீட்டர் AIR RIFLE மற்றும் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில், தங்கத்தை குறி வைத்துள்ளார்.

2018ஆம் ஆண்டு உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், 2019 உலகக் கோப்பை போடடியில் தங்கத்தையும் வென்று, தமிழகத்திற்கு மட்டுமல்லாமல், நம் நாட்டிற்கே பெருமை சேர்த்தவர், இளவேனில் வாலறிவன்.

Exit mobile version