காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நின்ற கோலத்தில் அத்தி வரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம், ஜூலை 1ம் தேதி தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதுவரை 44 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று வரை சயன கோலத்தில் காட்சியளித்து வந்த அத்திவரதர் இன்று காலை முதல் நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார். அத்திவரதரின் நின்ற கோலத்தை காண ஏராளமான பக்தர்கள் காஞ்சிபுரத்தை நோக்கி படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். மேலும், சயன கோலத்தில் அத்திவரதரை தரிசித்தவர்களும் நின்ற கோலத்தில் காட்சி தரும் அத்திவரதரை தரிசனம் செய்ய மீண்டும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் பொது மக்களின் பாதுகாப்பு கருதி பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.