நிலத்தடி நீர் நிர்வாகம் தொடர்பான அடல் பூஜல் யோஜனா என்னும் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார்.
முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாயின் 95ஆவது பிறந்த நாளையொட்டி அவர் பிறந்த நாளன்று, பொதுமக்கள் பங்களிப்புடனான நிலத்தடி நீர் நிர்வாகத் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர். நடப்பாண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு நிலத்தடி நீர் வள மேம்பாட்டுத் திட்டத்துக்கு ஆறாயிரம் கோடி ரூபாய் ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. குஜராத், அரியானா, கர்நாடகம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் 78 மாவட்டங்களில் எட்டாயிரத்துக்கு மேற்பட்ட ஊராட்சிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.