பொங்கல் விழாவில் குடும்பத்துடன் கலந்து கொண்ட முதலமைச்சர்

முதலமைச்சரின் சொந்த ஊரான சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில், கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதலமைச்சர் கலந்துகொண்டார்.

எடப்பாடி அதிமுக ஒன்றிய கழகம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டார். முன்னதாக, சிலுவம்பாளையத்தில் உள்ள பாலமுருகன் கோவிலில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர், உழவு மாடுகளுக்கு பொங்கல் வழங்கினார். மேலும், விழாவிற்கு வந்தவர்களுக்கு பொங்கல் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இதனையடுத்து, உயரத்தில் கட்டிவைத்த பானையை உடைத்து உறியடி போட்டியை தொடங்கிவைத்தார்.

இதை தொடர்ந்து, சேலம் மாவட்டம் எடப்பாடியில் நடைபெற்று வரும் தென்னிந்திய அளவிலான டென்னிஸ் போட்டியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார். போட்டியை துவக்கி வைத்தது மட்டுமல்லாமல், முதலமைச்சரே டென்னிஸ் விளையாடி, வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

தொடர்ந்து, சேலம் சீலநாயக்கன்பட்டியில் தனியார் மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். விழாவில், மருத்துவமனை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version