துணை ஆட்சியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் கட்டுக் கட்டாக ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் தனித் துணை ஆட்சியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 76 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனித்துணை ஆட்சியராக பணியாற்றி வருபவர் தினகரன். இவர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பவரது நிலத்தின் பத்திரத்தை விசாரணையில் இருந்து விடுவிக்க 50 ஆயிரம்  ரூபாய் லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்த ரஞ்சித் ரசாயணம் தடவிய 50 ஆயிரம் ரூபாயை தனித்துணை ஆட்சியர் தினகரனிடம் வழங்கினார். அப்போது தினகரனைக் கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகத்தில் கணக்கில் வராக ஒரு லட்சத்து 94 ஆயிரம் ரூபாயைக் கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து காட்பாடி தாங்கலில் உள்ள அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில்  கட்டுக்கட்டாக பதுக்கப்பட்டிருந்த ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 76 லட்சத்து 64 ஆயிரத்து 600 ரூபாய் ரொக்க பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version