அதிமுகவில் மட்டுமே கடைக்கோடி தொண்டனும் உயர் பதவிக்கு வரும் நிலை

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சூறாவளி பிரசாரம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருவண்ணாமலை மற்றும் வேலூர் தொகுதிக்குட்பட்ட இடங்களில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 3 நாட்கள் சூறாவளி பிரசாரத்தை நேற்று தொடங்கினார். பிரசாரத்தின் 2ஆம் நாளான இன்று வேலூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கும், திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்ட இடங்களில் அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு ஆதரவாகவும் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

வேலூர் மாவட்டத்தில் சேலம் இணைப்புச்சாலை, திருப்பத்தூர், திருப்பத்தூர் ஆசிரியர் நகர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி டவுன், மாதானூர் ஆகிய இடங்களில் திறந்த வெளி வேனில் வெயிலில் நின்று, மக்களிடம் முதலமைச்சர் பழனிசாமி வாக்குகள் சேகரித்தார். அப்போது அப்பகுதி மக்கள் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனிடையே ஜோலார்பேட்டையில் பிரசாரத்தில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, 50 ஆண்டுகால காவிரி நதி நீர் பிரச்னைக்கு அதிமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தொடர் குரல் எழுப்பியதால், நீதிமன்றம் மூலம் தமிழகத்திற்கு நீதி நிலைநாட்டப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் அதிமுகவில் மட்டுமே கடைக்கோடி தொண்டனும் உயர் பதவிக்கு வரும்நிலை இருப்பதாக, உண்மையை எடுத்துரைத்தார்.

ஆம்பூர் டவுன் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதலமைச்சர் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். இதைத்தொடர்ந்து, ஆம்பூர் பைபாஸ் சாலையில் புதிய நீதிக் கட்சி வேட்பாளர் ஏ.சி. சண்முகம், குடியாத்தம் மற்றும் ஆம்பூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் வாக்கு சேகரித்தார். சட்டம் ஒழுங்கில் தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்வதாக பெருமிதம் தெரிவித்த அவர்,  தேர்தல் அறிக்கையில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக நாடகமாடுவதாக சாடினார். 

Exit mobile version