சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளதால் மகாளய அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிரசித்த பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் தரை மட்டத்திலிருந்து சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் உள்ளது. இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் மகாளய அமாவாசையை முன்னிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். மழை பெய்யாததால் வறட்சியின் காரணமாக குடிநீருக்கே அவதிப்பட்டு வந்த பக்தர்கள் கடந்த 2 தினங்களாக சதுரகிரி மலைப்பகுதியில் மழை பெய்து நீர்வர துவங்கியுள்ளதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.