திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் நடந்த உண்டியல் எண்ணிக்கையில் 96 லட்சத்து 6 ஆயிரத்து 772 ரூபாய் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் விளங்குகிறது. இங்கு ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியன்று தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி முடிந்த ஓரிரு நாட்களில் உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதேபோல் ஆனி மாத பவுர்ணமி முடிந்து நடந்த காணிக்கை எண்ணும் பணியில் 120-க்கும் மேற்பட்ட சிவ பக்தர்கள் ஈடுபட்டனர். அதில் பக்தர்கள் காணிக்கையாக 96 லட்சத்து 6 ஆயிரத்து 772
ரூபாய் பணமாகவும், 226 கிராம் தங்கம் ஆகவும், ஆயிரத்து 983 கிராம் வெள்ளியாகவும் செலுத்தி இருந்தனர்.