காவல் உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் ஒருவர் சிக்கியுள்ளதாக தகவல்

களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளர் வில்சனை கொன்றவர்களில் ஒருவர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில், பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் வில்சன், கடந்த 8ம் தேதி தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 2 பேர் இந்த கொலையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

கொலையாளிகள், வில்சனை கொலை செய்துவிட்டு கேரள மாநில எல்லையில் நிறுத்தி வைத்திருந்த கார் மூலம், கேரளாவுக்கு தப்பிச் சென்றதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, தமிழக- கேரள மாநில காவல்துறையினர் இணைந்து தீவிரவாதிகளை கைது செய்ய தீவிரம் காட்டி வருகிறன்றனர்.

இந்நிலையில், காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில், கேரளாவின் தென்மலை பகுதியைச் சேர்ந்த 4 பேருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அவர்களை, அம்மாநில காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து தமிழக துறையிடம் ஒப்படைக்கப்பட்ட 4 பேரிடமும், கியூ பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த 4 பேரில் ஒருவர், வில்சனை சுட்டுக்கொன்றவராக இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து விசாரணையை தமிழக காவல்துறை தீவிரப்படுத்தி உள்ளது. வில்சனை கொன்றது தவுபிக், அப்துல் சமீம் எனக் கருதப்படும் நிலையில், அவ்விருவரில் ஒருவர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Exit mobile version