திருப்பூரில் பணமதிப்பிழப்பு பற்றி தெரியாமல் பழைய 500 ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்த முதியவர்களுக்குச் சென்னையைச் சேர்ந்த அறக்கட்டளை 46 ஆயிரம் ரூபாயை நேரில் சென்று வழங்கியுள்ளது…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பூமலூரைச் சேர்ந்த முதியவர்கள் ரங்கம்மாள், காளி ஆகியோர், கடந்த மாதம் மருத்துவச் செலவுக்காக தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்து தனது சகோதரரிடம் கொடுத்துள்ளனர். அப்போது பணமதிப்பிழப்பு பற்றித் தெரியாமலேயே பழைய 500
ரூபாய் நோட்டுகளை மாற்றாமல் சுமார் 46 ஆயிரம் வரை வைத்திருந்திருந்தது தெரியவந்தது. இந்தச் செய்தி ஊடகங்களில் வைரலாகப் பரவியதையடுத்து மாவட்ட ஆட்சியர் இவர்களை நேரில் அழைத்து இவர்கள் மருத்துவச் செலவிற்காக ஆணையையும், முதியோர் உதவித் தொகைக்கான ஆணையையும் வழங்கினார் . மேலும் பழைய 500 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது குறித்து ரிசர்வ் வங்கியிடம் ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த தனியார் அறக்கட்டளையின் தாளாளர் முதியவர்களின் வீட்டில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு அவர்கள் வைத்திருந்த பழைய 500 ரூபாய் நோட்டுகளின் மதிப்பிற்கேற்றவாறு 46 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.