வரலாற்றில் முதன்முறையாக அசாம் ரைபிள்ஸ் மற்றும் இந்திய கடலோர காவல்படை இணைந்து பணியாற்றும் முயற்சியாக இருபடையினருக்கும் இடையில் சென்னை கடலோர காவல்படை தளத்தில் சந்திப்பு நடைபெற்றது. அசாம் ரைபிள்ஸ் துணை ராணுவப் படையுடன் கடலோர காவல்படை இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கான ஒப்பந்தம் கடந்த 22ம் தேதி ஷில்லாங்கில் கையெழுத்தானது. இதன்படி பேரிடர் கால மீட்பு பணிகள், எல்லை பாதுகாப்பு பணிகள், கடல் எல்லைகளில் நடக்கும் சட்டவிரோத செயல்களை தடுத்தல் மற்றும் இந்திய வடகிழக்கு பகுதியை பாதுகாக்கும் பணிகள் குறித்து இருபடையினரும் இணைந்து பயிற்சி மேற்கொள்ள உள்ளனர்.
இதனடிப்படையில் இந்திய கடலோர காவல்படையின் பணிகள் குறித்து அறிவதற்காக அசாம் ரைபிள்ஸ் அதிகாரிகள் சென்னை கடலோர காவல்படை தளத்திற்கு வருகை புரிந்துள்ளனர். இந்திய கடலோர காவல்படை பொது இயக்குநர் ராஜேந்திர சிங் மற்றும் அசாம் ரைபிள்ஸ் பொது இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் சுக்தீப் சங்வான் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதையொட்டி இரு படைபிரிவினரும் சென்னை கடலோர காவல்படை தளத்தில் சந்தித்தனர். இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து இரு படைகளுக்குமான உறவு மேலும் வலுப்பெறும் என்றும் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.