வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், திரிபுரா மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களில் தொடர் கனமழையின் காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகளிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து பாய்கிறது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக அஸ்ஸாம் மாநிலம் கடுமையான சேதத்தை சந்தித்து வருகிறது. அங்குள்ள 28 மாவட்டங்களை சேர்ந்த 7 லட்சத்து 35 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். அஸ்ஸாம் மாநிலத்தில் இன்னும் சில நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. மழைக்கு இதுவரை 11 பேர் உயிரிழந்தாக கூறப்படும் நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.