வெள்ளத்தில் மிதக்கும் அசாம்!!

வட மாநிலங்களில் வெளுத்து வாங்கும் மழையால் அசாம் மற்றும பீகார் மாநிலங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள மக்கள் அசாம் மாநிலத்திற்கு ஆதரவாக நிற்பதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று மிரட்டி வரும் நிலையில், வடமாநிலங்களான அசாம், பீகார், உத்தரகாண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களை வெள்ளம் திக்குமுக்காட வைத்துள்ளது. அசாம் மாநிலத்தில் இடைவிடாது பெய்து வரும் மழையால், பிரம்மபுத்திரா ஆற்றில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் GOALPARA, BARPETA, KOKRAJHAR, MORIGAON உள்ளிட்ட 26 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

நாகான் மாவட்டத்தில் உள்ள கர்பி லாங்பி அணை முழு கொள்ளளவை எட்டியது. பாதுகாப்பு கருதி அணையின் மதகு வழியே உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கரையோர கிராமங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

எங்கும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கும் நிலையில், 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளத்தால் காசிரங்கா தேசிய பூங்காவில் பெரும் பாதிப்பைக் கண்டுள்ளது. 13 காண்டாமிருகங்கள் உள்பட 125 விலங்குகள் வெள்ளத்தில் சிக்கி மாண்டன. சுமார் 150-க்கும் மேற்பட்ட விலங்குகள் மீட்புக்குழுக்கள் மற்றும் வனத்துறையின் உதவியுடன் மீட்கப்பட்டன.

இதேபோன்று பீகார் மாநிலத்தில் பெய்து வரும் மழையால் GANDEK ஆற்றில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. 10 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கும் நிலையில் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சரண் பகுதியில் உள்ள அணையின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு, ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.

இதனிடையே அசாம், பீகார் உள்ளிட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்ட நிவாரணப்பொருட்களை குடியரத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கொடியசைத்து அனுப்பி வைத்தார். முன்னதாக வெள்ளப்பாதிப்பு குறித்து அசாம் மாநில முதலமைச்சர் சர்பானந்த சோனோவாலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாட்டு மக்கள் அசாமிற்கு துணை நிற்பதாகக் கூறினார்.

Exit mobile version