அப்பாவின் சிநேகிதருக்கு…

உலகத்தில் தான் ஒருவரைச் சுற்றி எவ்வளவு கதைகள்!

கதைகளுக்கு முடிவே இல்லை. மேலும்

எந்தக்கதையும் பூரணமான கதையல்ல.

                                            -அசோகமித்திரன்,                                                                

காலம் கடைசியாய் இழந்த கதைசொல்லி. ஆனால் காலத்தாலும் அழிக்கமுடியாத கதைகளுக்குச் சொந்தக்காரன்.

அறுபதுகளின் தொடக்கத்தில் மத்தியதர குடும்பங்களின் மனநிலையைப் பிரதிபளிக்கும் படைப்புகள் பெரும்பாலும் இவரது படைப்புகளாகவே இருந்தன.

தேம்ஸ் நதியில் தொடங்கி தென்சென்னை வரையில் எழில் விரிக்கும் வர்ணனைகளோ, புரியாத சிலேடை நடைகளோ, படுதீவிரமான இலக்கியத்தொடர்களோ இல்லாமல் எளியவர்களுக்கான மற்றும் எளியவர்களின் இலக்கியமாகவே இவர படைப்புகள் இருந்து வந்தன.

1966 ல் முழுநேர எழுத்தாளனாக இவரை மாற்றிய இவரது பேனா 2017 ல் இதே மார்ச் 23 ல் தான் ஓய்வுகொண்டது. எழுதி எழுதித் தீர்த்த மையையெல்லாம் ஒரே நாளில் கண்ணீராக வசூல் செய்துவிட்டு இதே நாளில்தான் கண்மூடினார். தமிழிலக்கியத்திற்கு குறிப்பாக சிறுகதைகளுக்கு உலகளாவிய அங்கீகாரத்தை பெற்றுத்தந்தவை இவர் கதைகள். அமெரிக்க இலக்கியங்கள் தமிழுக்கு அறிமுகமானதும் இவரால்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

சுருண்டோடும் வாழ்க்கைநதியின் சித்திரத்தை அசோகமித்திரன் படைப்புகள் நமக்குத் தருவதில்லை. அவை துளியில் ஆழ்ந்துவிடும் தன்மை உடையவை. அத்துளிகளில் நதியின் பிரம்மாண்டத்தை எப்போதும் அடக்கிக் காட்டுவதில்தான் அசோகமித்திரன் வெற்றி பெறுகிறார்” என்கிறார் ஜெயமோகன்

வாழ்வியல் என்கிற சுற்று வேதாந்தம் எல்லாம் பேசாமல் இருத்தலியல் என்பதை அழுத்திச் சொல்லும் இவரது படைப்புகள் கொண்டாடப்பட்டது போதாது என்றே கவலைப்படுகிறார் கரிசல் இலக்கியத்தின் முடிசூடா மன்னன் கி.ரா

எங்கோ இருந்து பேசுவது போல் அல்லாமல் வாசகனின் வாழ்க்கையோடு எளிதில் அணுக்கமாகிவிடுவதால் ஒரு “அப்பாவின் சிநேகிதர்” போலவே இவர் படைப்புகள் எப்போதும் இருக்கின்றன.

சாதாரண பாத்திரங்களைக் கொண்டு அசாதாரணமான விஷயங்களைச் சொல்லும் இந்த படைப்புலக ஜாம்பவானின் பயணம் முடிவுக்கு வந்து இன்றோடு ஓராண்டு.

இயற்றமிழ் உலகின் சிறுகதை என்னும் மலையில் ஆழப்பொறிக்கப்பட்ட இந்த  எழுத்துச்சித்திரம் கதையென்னும் கதை உலகில் உள்ளவரை கலையாத கல்வெட்டு என்றால் மிகையில்லை.

Exit mobile version