தலைவாசலில் ஆயிரத்து 22 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட, ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா மற்றும் கல்லூரியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்.
சேலம் மாவட்டம் தலைவாசலில் நவீனக் கால்நடைப் பூங்கா நிறுவப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.
அதன்படி, ஆயிரத்து 22 கோடி ரூபாய் மதிப்பில் சர்வதேச தரத்திலான ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்காவிற்கு முதலமைச்சர், கடந்த வருடம் பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டினார்.
ஆயிரத்து 102 புள்ளி 25 ஏக்கர் பரப்பரளவில், கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையம் கட்டப்பட்டுள்ளது.
கால்நடைப் பண்ணைப் பிரிவு, கால்நடை உற்பத்திப் பொருள்கள் பதப்படுத்துதல் பிரிவு, மீன்வளப் பிரிவு, விரிவாக்கம் மற்றும் திறன் மேம்பாடு வளாகம், தொழில் உருவாக்கப் பிரிவு என 5 பிரிவுகளாக இந்த கால்நடை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், கால்நடை மருத்துவக் கல்லூரியில், கால்நடைத்துறையின் பட்ட மேற்படிப்புகள், ஆராய்ச்சி படிப்புகள் மேற்கொள்ளும் வகையில் பயிற்சி கூடங்கள், ஆராய்ச்சி மையங்கள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளது.
திறப்பு விழாவில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்க இருக்கிறார்.