ஆஷஸ் தொடரின் 4 வது டெஸ்ட்டில் இங்கிலாந்தை 185 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
லண்டன் ஓல்டு டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற 4 வது போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. ஸ்டீவ் ஸ்மித்தின் அபார இரட்டைச் சதத்தால் 497 ரன்கள் குவித்து வலுவான நிலையை எட்டியது. இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 301 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 196 ரன்கள் அதிகம் பெற்று இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 186 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்தது. இதையடுத்து 383 ரன்கள் வெற்றி இலக்குடன் இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. 4வது ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 18 ரன்களை எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.
இந்நிலையில் 5 ம் நாள் ஆட்டத்தில் ஜோ டென்லி மற்றும் ஜேசன் ராய் ஆகியோர் களமிறங்கினர். 31 ரன்கள் எடுத்திருந்த ஜேசன் ராய், கம்மின்சின் பந்து வீச்சில் போல்ட் ஆனார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் 1 ரன்னுக்கும், ஜோ டென்லி 53 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதன்பிறகு ஜோடி சேர்ந்த ஜானி பேர்ஸ்டோவும், ஜோஸ் பட்லரும் ஆட்டத்தை டிரா செய்வதற்காக கடும் முயற்சியில் ஈடுபட்டனர். 25 ரன்கள் எடுத்திருந்த பேர்ஸ்டோவ், ஸ்டார்க் வேகத்தில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 197 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து 185 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி வருகின்ற 12 ஆம் தேதி தொடங்குகிறது.