BCCI -ன் தலைவராக பெறுப்பு ஏற்ற கங்குலி தாதாவின் கதை

இந்திய கிரிகெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக விளங்கியவரும், ரசிகர்களால் தாதா என்று அழைக்கப்பட்டவருமான சவுரவ் கங்குலி BCCI -ன் தலைவராக பெறுப்பு ஏற்றார். கங்குலி தாதா-வான கதை இதோ…

இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான கங்குலி, இந்திய அணியை ஒருங்கிணைத்து உலக அரங்கில் கம்பீர நடை போட வைத்த சாதனைக்கு உரியவர். அதுவரை இந்திய கிரிக்கெட்டுக்கு இருந்த முகத்தை மாற்றியவர். ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு அதன் சொந்த மண்ணிலேயே சவால் விடுமளவுக்கு அணியை சிறப்பாக்கியதால் தாதா – என்று அழைக்கப்பட்டவர். இளம் வீரர்களை ஊக்குவித்து, அவர்களை நட்சத்திரங்களாக்கியவர். சேவாக், யுவராஜ், ஜாகிர்கான், ஹர்பஜன்சிங் என கங்குலியால் உந்துதல் பெற்ற வீரர்களின் பட்டியல் மிக நீளமானது.

லார்ட்ஸ் மைதானத்தில் தான் கங்குலியின் டெஸ்ட் பயணம் தொடங்கியது. பலம் வாய்ந்த இங்கிலாந்து பந்துவீச்சை எதிர்கொண்ட சவுரவ், அறிமுக போட்டியிலேயே 131 ரன்கள் குவித்து அசத்தினார். லார்ட்ஸ் மைதானத்தில் அறிமுக வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன் இதுதான். அதுமட்டும் இல்லாமல் தனது இரண்டாவது இன்னிங்சிலும் சதமடித்து கிரிக்கெட் உலகுக்கு தன்னுடைய வருகையை பதிவு செய்தார்.

2003 உலகக்கோப்பையில் கென்யாவுக்கு எதிராக இரண்டு முறை பாலை ஸ்டேடியத்துக்கு வெளியே அனுப்பி வைத்தார் நம் தாதா. பந்தை அவுட் ஆஃப் ஸ்டேடியம் அனுப்புவதிற்கு கங்குலியை விட்டால் சிறந்த ஆளில்லை என்பதை மறுக்க முடியாது. இத்தனைக்கும் கங்குலி அன்று ஆடியது பேட்ஸ்மேன் ஃப்ரெண்ட்லி பிட்ச்களில் அல்ல… பந்துகள் எகிறும் பவுன்ஸி பிட்ச்களில்…

கங்குலி ஃபார்மில் இருக்கும்போது உண்மையிலேயே அவர் வங்கத்துப் புலிதான். எதிரணியை வெறித்தனமாகத் தாக்குவார். அதற்கு மிகச்சிறந்த உதாரணம் 1997ல் நடந்த சஹாரா கோப்பை. பாகிஸ்தானுக்கு எதிரான அத்தொடரில் தொடர்ந்து 4 போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வாங்கி அசத்தினார் தாதா. இதுநாள் வரையில் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 4 போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்ற ஒரே வீரர் கங்குலி தான்.

ஒரு காலகட்டத்தில் கிரிக்கெட் என்பது ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். 2001 ஆண்டு இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் ஆஸி அணியை வீழ்த்தி அவர்களது 16 போட்டி தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டதும் தாதா கங்குலிதான்.

தாதா என்றாலே இங்கிலாந்து நாட்டவர்களுக்கு 2002 நாட்வெஸ்ட் கோப்பைதான் நினைவிற்கு வரும். கிரிக்கெட்டின் மெக்காவாகக் கருதப்படும் மிகவும் மரியாதைக்குரிய லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றி பெற்ற பிறகு தாதா சட்டையக் கழற்றி சுற்றிய காட்சி இன்னும் நம் கண் முன்னர் வந்து போகும். தாதாவின் வெறித்தனமான ரசிகனுக்கு அதுதான் மெய்சிலிர்க்கும் தருணம்.

“இவர் டெஸ்ட் போட்டிகள் விளையாட லாயக்கற்றவர்” – என்று பலரும் சொன்னபோது, அவர்களுக்கான பதிலாக, டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியை வேட்டையாடியது இந்த வங்கத்து சிங்கம். யுவராஜ் சிங்கோடு இணைந்து 300 ரன்கள் குவித்தார் கங்குலி. டெஸ்ட் போட்டியைக் கூட டி20 போல ஆடினார் கங்குலி.

இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டன், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டார். 2008ம் ஆண்டு ஆஸி அணிக்கு எதிராக தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய தாதாவிடம், ஒரு சில ஓவர்கள் கேப்டனாக இருக்கும்படி கூறினார் அப்போதைய தற்காலிக கேப்டன் தோனி. அதன்படி கேப்டனாக சில நிமிடங்கள் விளையாடிய கங்குலி வெற்றி கேப்டனாகவே கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார். பின்னர் பெங்கால் கிரிக்கெட் சங்கத்திற்குத் தலைவராகப் பொறுப்பேற்றார்.

இந்தியா பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை போட்டி மழையால் கிட்டத்தட்ட ரத்தாகும் நிலைக்குத் தள்ளப்பட, மைதானத்தற்குள் களம்புகுந்த பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவர் கங்குலி, துரிதமான நடவடிக்கைகள் மூலம், மைதானத்தை உடனடியாக சீரமைத்தார். அவரது செயல்பாட்டை வேறு எந்த ஒரு நபரும் இதுவரை செய்ததில்லை. தாதாவிடமிருந்து கிரிக்கெட்டை யாராலும் ஒதுக்கிவிட முடியாது. அதனால்தான் இப்போது BCCI -ன் தலைவராக பெறுப்பு ஏற்றுள்ளார் நமது தாதா கங்குலி. அவரிடமிருந்து கிரிக்கெட் ரசிகர்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள்.

Exit mobile version