மர்ம ஓவியவராக திகழும் பெங்க்ஸிலின் : யார் இந்த பெங்க்ஸிலின் ? சிறப்பு தொகுப்பு

தனது அடையாளத்தை வெளிப்படுத்தாத மர்ம ஓவியரான பெங்க்ஸியின் ஓவியம் 120 கோடி ரூபாய் மதிப்புக்கு ஏலம் போனது. யார் இந்த பெங்க்ஸி?

இங்கிலாந்தைச் சேர்ந்த ஓவியர் பெங்க்ஸியின் “பாராளுமன்றத்தில் குரங்குகள்” என்ற ஓவியம் 17 மில்லியன் டாலர்களுக்கு விற்று சாதனை புரிந்துள்ளது. இது இந்திய மதிப்பில் 120 கோடி ரூபாய்க்கு சமமான தொகை. இத்தனைக்கும் அந்த பேங்க்ஸி யார், அவர் எப்படி இருப்பார் என்று மக்கள் யாருக்கும் தெரியாது. ஆனாலும் பெங்க்ஸியின் ஓவியங்களை வாங்கவும் அவரது கருத்துகளைக் கேட்கவும் உலகெங்கும் ஒரு கூட்டம் உள்ளது.

இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி, இங்கிலாந்தில் வாழும் பெங்க்ஸி ஒரு ஓவியர், எழுத்தாளர், அரசியல் செயல்பாட்டாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆவார். 1990களில் இருந்து இயங்கிவரும் அவர் தனது அடையாளத்தை வெளிப்படுத்தியதே இல்லை. ஆனால், அவர் ராபின் கன்னிங்ஹாம் என்பவராக இருக்கலாம் என்று ஒரு யூகம் உள்ளது. இவர் தனது ஓவியங்களை உலகின் முக்கிய தெருக்கள், சுவர்கள் மற்றும் பாலங்களில் வரைந்து உள்ளார். அவரது சில ஆவணப்படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்று உள்ளன. 2010ல் இவர் எடுத்த முதல் ஆவணப்படமான “எக்ஸிட் த்ரூ தி கிப்ட் ஷாப்” ஆஸ்கர் விருதுக்குப்
பரிந்துரைக்கப்பட்டது.

பெங்க்ஸியின் பார்வையும், ஓவியமும், கருத்துகளும் சாமானியர்களிடமிருந்து அவரைப் பெரிதும் வேறுபடுத்திக் காட்டுகின்றன. தனது ஓவியங்கள் மூலம் பேங்க்ஸி ஒரு அமைதியான ஒரு போரையே நடத்தி வருகிறார்.

“சுவரோவியம் என்பது அடித்தட்டு வர்க்கத்தின் பழிவாங்கல் நடைமுறை அல்லது அவர்களின் கொரில்லா போர்முறைகளில் ஒன்று” – என்பது ஓவியங்கள் பற்றிய பெங்க்ஸியின் பார்வை ஆகும். பெங்க்ஸி அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வாக ஓவியங்களை முன்வைக்கிறார். “உங்களிடம் தொடர்வண்டி நிறுவனம் ஒன்று சொந்தமாக இல்லையென்றால் அப்படியொன்றை வரைந்துகொள்ளுங்கள்” – என்பது அவரது புகழ்பெற்ற மேற்கோள் ஆகும்.

பேராசை, வறுமை, இரட்டை நிலைப்பாடு, சலிப்பு, மனக்கசப்பு, அபத்த மனநிலை, சமுக அந்நியமாதல் போன்றவற்றை கடுமையாக விமர்சிக்கும் பெங்க்ஸி, போர் எதிர்ப்பு, ஆடம்பரமாக பொருட்களை வாங்குவதற்கு எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, சர்வாதிகார எதிர்ப்பு – போன்றவற்றைத் தனது ஓவியங்களில் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.

பெங்க்ஸியின் ஓவியங்கள் ஒருபக்கம் சாலைகளில் சிதிலமைந்து கிடக்கின்றன, மறுபக்கம் மிகப் பெரிய சேமிப்புகளை அலங்கரிக்கின்றன, இரண்டையும் அவர் சமமாகவே எடுத்துக் கொள்கிறார். கடந்த 2008ஆம் ஆண்டில் பெங்க்ஸியின் ஒரு ஓவியம் 25 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு விலைபோனது. கடந்த 2018ஆம் ஆண்டில் பெங்க்ஸியின் புகழ்பெற்ற சிறுமியும் பலூன் என்ற ஓவியம் 14 லட்சம் டாலர்களுக்கு விற்கப்பட்ட போது, பெங்க்ஸி தானே அந்த ஓவியத்தை அழித்தார் – இந்த நிகழ்ச்சி உலகெங்கும் பேசப்பட்டது.

இப்போது மீண்டும் அவரது ஓவியம் சாதனை விலைக்கு விற்றுள்ளது. தனது ஓவியத்தின் விற்பனை குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ள பெங்க்ஸி, “பெங்க்ஸி ஓவியத்துக்குச் சாதனை விலை! அதற்கு இப்போது நான் சொந்தக்காரன் இல்லை என்பது அவமானம்” – என்று இதனையும் விமர்சனமே செய்து உள்ளார்.

அடையாளத்தை வெளிப்படுத்தாத மர்மமான நடவடிக்கைகளாலும், தனது திறமையாலும் நமது காலத்தின் மிக முக்கிய ஓவியர் மற்றும் கருத்தாளராக பெங்க்ஸி ஐரோப்பிய மக்களால் பார்க்கப்படுகின்றார்.

Exit mobile version