பாஜக இளைஞரணியினரின் உருவப்பட எரிப்பு போராட்டத்திற்கு, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில், அதிமுக பீனிக்ஸ் பறவையாக செயல்பட்டு வரும் நிலையில், பாஜக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள், தொடர்ந்து தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இடைக்கால பொதுச்செயலாளரின் உருவப்படத்தை, கோவில்பட்டியில் பாஜக இளைஞரணி நிர்வாகிகள் கொளுத்தியதற்கு, பல்வேறு தரப்பிலும் இருந்து கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன், அதிமுகவில் பலரால் மதிக்கப்படாத சிலரை, பாஜகவில் சேர்த்தபோது மகிழ்ந்த அண்ணாமலை, தற்போது புலம்புவது ஏன்? என்றும், அப்போது எல்லாம் அமர்பிரசாத் ரெட்டி எனும் அதிமேதாவி எங்கோ தலைமறைவாக இருந்தாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கழகம் காத்த மாவீரன், இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியின் தலைமையை ஏற்று, திமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தினந்தோறும் கழகத்தில் இணைந்து வருகின்றனர். இதை பொறுத்துக் கொள்ள முடியாமல், தன்னைத் தானே புகழ்ந்து கொள்பவரை, தலைவராக ஏற்றுக் கொண்ட கோவில்பட்டியை சேர்ந்த 4 நபர்கள், அவர்களது தலைவர் வழியில் சுய விளம்பரத்திற்காக உருவப்படத்தை கொளுத்தியதை, கடலூர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.