திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், திருவண்ணாமலை கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், கோயிலுக்குள் சிவாச்சாரியார்கள் மட்டும் வழக்கமான வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்தாண்டுக்கான ஆடிப்பூர விழாவை முன்னிட்டு விநாயகர் வழிபாடு, யாக சாலை பூஜைகளுடன் நேற்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று காலை அம்மன் சன்னதிக்கு எதிரே உள்ள தங்கக் கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் பிரமோற்சவ விழா தொடங்கியது. இதனை தொடர்ந்து உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால், கோயில் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.