மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக டெல்லி பாஜக தலைமையகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருண் ஜெட்லி நேற்று காலமானார். டெல்லியிலுள்ள வீட்டில் வைக்கப்பட்ட உடலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பல்வேறு கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து அருண் ஜெட்லி உடல் ஊர்வலமாக பாஜக தலைமை அலுவலகத்தில் கொண்டு வரப்பட்டது. அங்கு வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு தொண்டர்கள், பொதுமக்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று பிற்பகல் முழு அரசு மரியாதையுடன் அருண் ஜெட்லி உடல் தகனம் செய்யப்படவுள்ளது.