புதிய அமைச்சரவையில் இடம்பெற விரும்பவில்லை: பிரதமர் மோடிக்கு, அருண் ஜெட்லி கடிதம்

தன்னுடைய உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டியது இருப்பதால், புதிய அமைச்சரவையில் இடம்பெற விரும்பவில்லை என பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2-வது முறையாக நாளை மத்தியில் பதவியேற்க உள்ளது. கடந்த பாஜக ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கைகளின்போது முக்கிய பங்காற்றினார். இதனிடையே, கடந்த ஆண்டில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மக்களவை தேர்தல் பிரசாரங்களிலும் அவர் சரிவர பங்கேற்காத நிலை இருந்தது.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு அருண் ஜெட்லி எழுதியுள்ள கடிதத்தில், மருத்துவர்களின் ஆலோசனைப்படி தன்னுடைய உடல்நிலையில் முழு கவனம் செலுத்த வேண்டியுள்ளதால், தான் புதிய அமைச்சரவையில் பங்கேற்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே இதுகுறித்து மோடியிடம் ஆலோசனை மேற்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இருப்பினும் கட்சிப் பணிகளில் தன்னை இணைத்துக் கொள்ள அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், புதிய அமைச்சரவையில் நிதியமைச்சராக யார் இடம்பெறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Exit mobile version