ஊரடங்கில் திரையரங்கின் வெற்றிடத்தை நிரப்பியுள்ளதா ஓ.டி.டி. தளம்? – ஓர் அலசல்

கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் திரைப்பட ரசிகர்கள் அதிக ஏமாற்றம் அடைந்துள்ளனர். வெள்ளியன்று புதிய திரைப்படத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் அவர்களுக்கு ஆறுதலாக, ’நாங்க இருக்கோம்’ என்கிறபடி ஓ.டி.டி.தளங்கள் வந்துள்ளன. உண்மையில் அவை கைகொடுத்தனவா என்பது குறித்து பார்ப்போம்.

கதாநாயகர்களின் ஆதிக்கத்தால் கட்டமைக்கப்பட்டுள்ள தமிழ்த் திரையுலகில், நாயகிகளின் கை ஓங்கத் தொடங்கியுள்ளது. தமிழ்த் திரையுலகம் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் இது எதிரொலித்துவருகிறது. இந்த வகையில் ஓ.டி.டி. தளத்தில் வெளியான படம்தான், ஜோதிகாவின் `பொன்மகள் வந்தாள்’. இந்தப் படம், ஓ.டி.டி. தளத்தில் வெளியிடப்படும் என அறிவிப்பு வந்ததும், தயாரிப்பாளர்களும், திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 

தமிழ்நாடு தியேட்டர் மற்றும் மல்டிப்ளெக்ஸ் உரிமையாளர்கள் சங்கமானது, ஜோதிகாவின் கணவர் சூர்யா நடித்த படங்களையும், அவரது ’2 டி’ நிறுவனம் தயாரித்த படங்களையும் தடைசெய்வதாக அறிவித்தது. ஆனாலும் எதிர்ப்புகளையெல்லாம் மீறி, மே 29ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது, ‘பொன்மகள் வந்தாள்’.

ஓ.டி.டி.யில் வெளியாகுமென பரவலாக அறிவிக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் என்பதால் ’பொன்மகள் வந்தா’ளுக்கு எதிர்ப்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியது. சிறுமிகள் கடத்தல் பற்றிய கருவாகக் கொண்ட கதைதான், இந்தப் படம். இதன் முதல் பாதி கணிசமான வரவேற்பைப் பெற்றாலும், இரண்டாவது பாதி சலிப்பை ஏற்படுத்தியதாக ரசிகர்களின் பரவலான கருத்தாக அமைந்தது. அதேவேளை, இப்படத்தில் ஜோதிகாவின் நடிப்பு அதிகமாகவே பாராட்டப்பட்டது. 

மே-30 அன்று ‘ஜி5’ எனும் ஓ.டி.டி. தளத்தில் ஐந்து இயக்குநர்கள் இயக்கத்தில் ’மமகிகி’ எனும் திரைப்படம் வெளியானது. இயக்குநர் நலன் குமாரசாமி, ரமேஷ் திலக், ப்ரீத்தி ஆனந்தன், சுவாமி நாதன், மனஸ் ஆகியோர் இதில் நடித்திருந்தனர். ஒரே கல்லூரியில் படித்த நான்கு நண்பர்கள், 5 ஆண்டுகள் கழித்து திரும்பவும் சந்திக்கிறார்கள். அந்த 5 ஆண்டுகளில் அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்களை காமெடியாகச் சொல்லும்விதமாக கதைக்களம் அமைந்திருந்தது. புதுவிதமாக உருவாக்கப்பட்டது என்றாலும் இந்தப் படம் இணையவாசிகளை பெரிய அளவில் ஈர்க்கவில்லை.

ஜோதிகாவைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான `பென்குயின்’ திரைப்படமும் அமேசான் பிரைமில் வெளியானது. வழக்கம்போல அதீத எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்த இந்தப் படம், ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. கீர்த்தி சுரேசின் நடிப்பைத் தவிர, வேறு எதுவும் ரசிக்கும்படியாக இல்லை என எதிரான விமர்சனங்களைக் கொட்டித் தீர்த்தனர், இணையவாசிகள்.

’ஜீ5’-ல் ஜூலை 10-ம் தேதி வெளியான ’காக்டெயில்’, வரலட்சுமி நாயகியாக நடித்து வெளியான`டேனி’ ஆகிய படங்கள் ரசிகர்களை ஊடரங்கு காலத்தில் மேலும் சோதனைக்கு உள்ளாக்கியதைப் போலத்தான் படம் பற்றிய கருத்துகள் நிரூபிக்கின்றன. ஆகஸ்ட் 14-ல் வெளியான ’லாக்கப்’ திரைப்படம் மற்ற படங்களைக் காட்டிலும், நல்ல வரவேற்பைப் பெற்றது.

க/பெ. ரணசிங்கம் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படமும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும்வகையில் இருக்க, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. மாதவன், அனுஷ்கா நடிப்பில் வெளியான `சைலன்ஸ்’ படம், தலைப்பைப் போலவே அமைதியாக பெரிய விமர்சனங்களின்றிக் கிடக்கிறது. அக்டோபர் 6ஆம் தேதி ’சிம்பிளி செளத்’ ஓ.டி.டி. தளத்தில் வெளியான பாலாவின் வர்மாவுக்கு, `ஆதித்யா வர்மா’ படமே மேல் என்று அவரது ரசிகர்களே சொல்லும் அளவுக்குத்தான் இருந்தது.

கடந்த 6 மாதங்களில் ஓ.டி.டி.யை மட்டுமே நம்பியிருந்த திரைப்பட ரசிகர்களுக்கு, அந்த தளங்கள் எந்த வகையிலும் கைகொடுக்கவில்லை. `சோடைபோகாத படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து ஓ.டி.டி.யில் வெளியாகின்றனவா?’ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள் மீது திரைரசிகர்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்.

திரையரங்குகள் இல்லாத காலகட்டத்தில், ஓ.டி.டி.யை நோக்கி ரசிகர்களைப் திருப்பும் முயற்சியானது, அவ்வளவாக வெற்றியைத் தரவில்லை எனக் கூறலாம். இந்த  படங்களே இதற்கு அருமையான சான்று ஆகும். திரையரங்குகள் கொடுக்கும் அனுபவத்தை ஓ.டி.டி. தளங்கள் கொடுக்கமுடியாது என்ற போதிலும், அதிக விலை தின்பண்டங்கள், டிக்கெட் செலவுகள், பார்க்கிங் கட்டணங்கள் குறைந்தபாடில்லை என்பதால், ஓ.டி.டி.க்கு ஆதரவான குரல்கள் அதிகரித்துவருகின்றன. 

ஆனால், ஓ.டி.டி.யில் வரும் படங்களால் இந்தக் குரலும் குறையத்தொடங்கியுள்ளது. `சூரரைப்போற்று’ உள்பட்ட படங்கள் ஓ.டி.டி மீதான பார்வையை மாற்ற வாய்ப்பிருக்கிறது. எப்படியிருப்பினும், திரையரங்குகள் திறப்புக்குப் பின், ஓ.டி.டி.க்கான உண்மையான மதிப்பு தெரியவரும்.

 

– பா.ஜெ. பிரகாஷ்

 

Exit mobile version