வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடும் கொள்ளை கும்பல் கைது

 
தமிழகத்தில் முதியோர் மற்றும் பெண்களை குறிவைத்து வங்கிக் கணக்கில் இருந்து 3 கோடிக்கு மேல் பணத்தை திருடிய கொள்ளை கும்பலை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் முதியவர்கள் மற்றும் பெண்களை குறிவைத்து பணம் திருடப்படுவதாக புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. இதனையடுத்து  மத்திய குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் ஆணையர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

 விசாரணையில் டெல்லி வாழ் தமிழர்களிடம் வங்கி அதிகாரிகள் பேசுவது போல பேசி, மோசடி செய்யப்படுவதும், இணைய வழி சேவைகளான கூகுள் பே, பே.டி.எம் உள்ளிட்டவைகள் மூலமும் மோசடி செய்யப்படுவது கண்டறியப்பட்டது. இதனையடுத்து டெல்லி விரைந்த தனிப்படை காவல்துறையினர், மோசடியில் ஈடுபட்ட தேவ்குமார், வில்சன், தீபக்குமார் ஆகிய மூவரை கைது செய்தனர்.

பின்னர், சென்னை அழைத்து வரப்பட்ட அவர்களிடம் நடத்திய விசாரணையில், பீகார், மேற்கு வங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மேலும் பல முக்கிய குற்றவாளிகள் தலைமறைவாகியுள்ளது தெரிய வந்துள்ளது. இதை அடுத்து, அவர்களையும் கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version