உத்தரப்பிரதேசம் வாரணாசியில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட தாய் 15 நாட்களுக்குப் பின் பிணையில் விடுவிக்கப்பட்டதையடுத்து மீண்டும் தன் குழந்தையுடன் சேர்ந்தார்.
குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக வாரணாசியில் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற சூழலில் ஆர்வலர் ரவி சேகர், அவர் மனைவி ஏக்தா ஆகியோர் மற்றும் பனாரஸ் இந்துப் பல்கலைக்கழக மாணவர்கள் என ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். ஏக்தாவுக்கு 14 மாதக் கைக்குழந்தை உள்ளது. இந்நிலையில் பெற்றோர் இருவருமே சிறை சென்றதால் அந்தக் குழந்தையை உறவினர்கள் கவனித்துக்கொண்டனர். சிறையில் இருந்தவர்கள் சார்பில் அவர்களின் உறவினர்கள் பிணை மனு தாக்கல் செய்த நிலையில் ரவி சேகர், ஏக்தா உட்பட 58 பேருக்கு நீதிமன்றம் பிணை அளித்தது. இதையடுத்து நேற்று அனைவரும் விடுவிக்கப்பட்டனர். போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றதால் பிரிந்திருந்த தாயும் குழந்தையும் 15 நாட்களுக்குப் பின் நேற்று மீண்டும் ஒன்று சேர்ந்தனர். குழந்தை ஆயிரா தாய்ப்பால் குடிப்பவள் என்பதால் அவரைப் பிரிந்திருந்த நாட்களில் தான் பெரிதும் தவித்துப் போய்விட்டதாகச் சூழலியல் ஆர்வலர் ஏக்தா தெரிவித்துள்ளார்.