தனது மகன் வீர மரணமடைந்து, இந்தியாவையே சொந்தமாக தந்துள்ளதாக புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிவச்சந்திரனின் தந்தை சின்னையா உருக்கமாக தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தனியார் நிறுவனத்தின் சார்பில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் சிவச்சந்திரன் குடும்பத்தினருக்கு இரு சக்கர வாகனம் வழங்கப்பட்டது. இதனை பெற்றுக் கொண்ட ராணுவ வீரரின் தந்தை சின்னையா, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ராணுவத்தில் பணிபுரிய தனது மகன் சென்ற போது தான் கவலையடைந்ததாக கூறினார். அப்போது நீ இறந்தால் உன் சொந்தம்பந்தம் மட்டும் தான் வரும், தான் இறந்தால் இந்தியாவே வரும் என சிவச்சந்திரன் கூறியதை நினைவுக்கூர்ந்த அவர், தனக்கு ராணுவ பணியில் ஏதாவது நிகழ்ந்தால் தம் கிராமத்தை இந்த நாடே திரும்பி பார்க்கும் என்று தனது மகன் சொன்னது இன்னும் தன் காதில் ஒலித்துக்கொண்டிருப்பதாக உருக்கமாக கூறினார்.