இறப்பிலும் மற்றவர்களை சிரிக்க வைத்த ராணுவ அதிகாரி

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ராணுவ அதிகாரி ஒருவர், தனது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்களை, தனது இறப்புக்குப் பின்னும் சிரிக்கவைத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஐரோப்பாவில் உள்ள அயர்லாந்து நாட்டின் லீனெஸ்டர் மாகாணத்தில் வாழ்ந்து வந்தவர் முன்னாள் இராணுவ அதிகாரி ஷே பிராட்லி.
கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுவந்த இவர், கடந்த 12ஆம் தேதி மரணமடைந்தார். இறப்புக்கு முன்னர் இவர் தனது கடைசி ஆசையாக, ‘எனது இறுதிச் சடங்குக்கு வரும் நண்பர்கள், உறவினர்கள் யாரும் அழக் கூடாது, அவர்கள் அனைவரும் வாய்விட்டு சிரிக்க வேண்டும்’ – என்று கூறி இருந்தார்.

இந்நிலையில் இவரது இறுதிச் சடங்கில், இவரது சவப்பெட்டி குழிக்குள் இறக்கப்படும்போது திடீரென அவரது குரல் கேட்டது. அதில், “நான் எங்கு இருக்கிறேன்? இங்கு மிகவும் இருட்டாக இருக்கிறது. என்னை வெளியே விட்டுவிடுங்கள்” – என்று ஷே பிராட்லி கூறினார், அத்தோடு அவர் சவப் பெட்டியை தட்டும் சத்தமும் கேட்டது. இதனால் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்கள் சிரித்தனர். இதனால் ஷே பிராட்லியின் விருப்பமும் நிறைவேறியது!.

இதற்காக, இறப்புக்கு முன்னரே தனது குரலைப் பதிவு செய்திருந்த ஷே பிராட்லி அதைத் தனது மகள் ஆண்ட்ரியாவிடம் கொடுத்து இருந்தார். அந்த ஒலிப்பதிவு சவக் குழிக்கு அருகில் இருந்த ஸ்பீக்கர் மூலம் ஒலிக்கும்படி ஆண்ட்ரியா ஏற்பாடு செய்திருந்தார். இதனால் அந்த இறுதிச் சடங்கு அர்த்தமுள்ளதாக மாறியது.

வாழும்போதே பிறரின் அழுகையில் இருந்து மகிழ்ச்சியைத் தேடும் மனிதர்களின்மத்தியில், தனது இறுதிச் சடங்கில் கூட மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஷே பிராட்லி கொண்டிருந்த எண்ணத்தை பலரும் பாராட்டிவருகின்றனர். ஷே பிராட்லியின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் சிரிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகின்றது.

Exit mobile version