அசாமில் ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வயல்வெளியில் இறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாமின் மிசாமாரி பகுதியில் இருந்து திமாபூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்த ராணுவ ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து நாகோன் பகுதியின் தரம்துல்லில் வயல்வெளியில் அந்த ஹெலிகாப்டர் உடனடியாக தரையிறக்கப்பட்டது.
ஹெலிகாப்டரில் பயணம் செய்த 3 ராணுவ வீரர்கள் பத்திரமாக உயிர்தப்பினர். ஹெலிகாப்டர் வயல்வெளியில் இறங்கியதால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் அந்த இடத்தில் அதிகளவில் கூடினர். இதையடுத்து ஹெலிகாப்டரின் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு, அது அங்கிருந்து புறப்பட்டு சென்றது. உரிய நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டு உடனடியாக தரையிறக்கப்பட்டதால், எந்தவித பாதிப்பும் இன்றி ராணுவ வீரர்கள் உயிர் தப்பியுள்ளனர்.