ஆயுத பூஜை, தீபாவளியை முன்னிட்டு வெவ்வேறு வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க முடிவு

ஆயுத பூஜை, தீபாவளி ஆகிய விழாக்காலங்களை முன்னிட்டுச் சென்னையில் 5 இடங்களில் இருந்து வெவ்வேறு வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க வகை செய்யப்பட்டுள்ளது.

ஆயுத பூஜை மற்றும் தீபாவளியை முன்னிட்டுச் சென்னையில் 5 இடங்களில் இருந்து வெவ்வேறு வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க வகை செய்யப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்கள் மற்றும் வழித்தடங்கள் விவரங்களைப் பார்க்கலாம்…

ஆந்திர மாநிலம் செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாகப் புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

திண்டிவனம் வழியாகக் கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.
திண்டிவனம் வழியாகத் திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி வழியாகச் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து புறப்படும்.

திண்டிவனம் வழியாகப் பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் மற்றும் திண்டிவனம் வழியாகப் புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் தாம்பரம் மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து புறப்படும். வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி வழியாகத் திருப்பதி செல்லும் பேருந்துகள் பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும்.

மயிலாடுதுறை, நாகை, வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, உதகை, இராமநாதபுரம், சேலம், கோவை, எர்ணாக்குளம், பெங்களூர் ஆகிய இடங்களுக்குச் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும்.

Exit mobile version