2 வருடங்களுக்கு முன்பு பட்டபகலில் பெண்ணை கொலை செய்து நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் பெண் உட்பட 2 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வேலாயுதம் நகரை சேர்ந்தவர் குணசேகரன். இவருடைய மனைவி பெயர் பாரதி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த வருடம் மார்ச் 27 ஆம் தேதி குணசேகரன் காலையில் பணிக்கு சென்று விட பிள்ளைகளும் பள்ளிக்கு சென்று விட மனைவி பாரதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். பள்ளி சென்றிருந்த பிள்ளைகள் இருவரும் மாலை 5:30 மணியளவில் வீடு திரும்பியவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அவர்களது தாய் பாரதி வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவர் கழுத்தில் அணிந்திருந்த 15 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது குறித்து, பொதுமக்கள் கொடுத்த புகாரின்பேரில், ஜெயங்கொண்டம் காவல்துறையினர் வழக்கு பதிந்து, கொலையாளிகளை தேடி வந்தனர். காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் இந்த வழக்கின் குற்றவாளிகளை பிடிக்க தீவிரம் காட்டினார். இதில் கொலை வழக்கு தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு முக்கிய துப்புகள் மற்றும் ஆவணங்கள் காவல்துறையினருக்கு கிடைத்தன. அதன் அடிப்படையில் ஜெயங்கொண்டம் வேலாயுதம் நகரை சேர்ந்த செந்தில்குமார் மனைவி ஜெயந்தி மற்றும் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த சின்ராசு ஆகிய இருவரும் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயந்தி என்பவர் பலரிடம் வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் மோசடி செய்து, கடந்த வருடம் அக்டோபர் மாதம் 12ஆம் தேதி காவல்துறையில் கைது பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து குற்றவாளிகள் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 15 பவுன் நகையை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.