நீலகிரியில் யானைகள் வழித்தடத்தில் ரிசார்ட் உள்ளதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் இருவர் குழு அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கட்டடம் கட்ட தடை கோரியும் ரங்கராஜன் என்பவர் தொடர்ந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவுடன் நீலகிரி ரிசார்ட் உரிமையாளர்கள் தொடர்ந்த மேல்முறையீடு மனுவும் ஒன்றாக விசாரிக்கப்பட்டது. வழக்கு விசாரணை தொடங்கியதும், யானைகள் வழித்தடத்தில் ரிசார்ட் கட்டக்கூடாது என தலைமை நீதிபதி தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த நீலகிரி ரிசார்ட் உரிமையாளர்கள் தரப்பு, உரிய அனுமதியுடனே ரிசார்ட் கட்டப்பட்டுள்ளதாக வாதாடினர்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி பாப்டே, காடுகளுக்குள் என்ன செய்கிறீர்கள்?, அங்கு உங்களுக்கு என்ன வேலை என ரிசார்ட் உரிமையாளர்களை கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ரிசார்ட் உரிமையாளர்கள், கட்டடம் கட்டும் போது காடும் கிடையாது, யானை வழித்தடமும் கிடையாது என்றனர். அப்போது குறுக்கிட்ட தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், ரிசார்ட் உரிமையாளர்கள் கூறும் இடங்கள் அனைத்தும் காடுகள் என வரையறுக்கப்பட்ட நிலங்கள் என்று தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், யானைகள் வழித்தடத்தில் ஆக்கிரமிப்பு செய்வதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றனர். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், நீலகிரியில் யானைகள் வழித்தடத்தில் ரிசார்ட் உள்ளதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் இரண்டு பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டனர்.