முசிறி அருகே பண்டைய தமிழர்கள் வாழ்ந்த தொல்லியல் தடயங்கள் கண்டுபிடிப்பு

திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொல்லியல் ஆய்வாளர்கள் கள ஆய்வில் ஈடுபட்டு பண்டைய தமிழர்கள் வாழ்ந்த தொல்லியல் தடயங்களை கண்டுபிடித்துள்ளனர்.

முசிறி அருகே உள்ள குருவம்பட்டி கிராமம், மிகவும் பழமை வாய்ந்த கிராமம் ஆகும். இங்கு, பண்டைய தமிழர்கள் வாழ்ந்த தொல்லியல் தடயங்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், அங்குள்ள சிவன் கோயில் சுற்றுப்புறத்தில் தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில், பழங்கால தமிழர் நாகரீகம் இருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக கருப்பு, சிவப்பு மண்பாண்டங்களின் உடைந்த பாகங்கள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட வளையல்கள் உள்ளிட்டவை கிடைத்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.  மேலும், அங்கு கிடைத்த மண்பாண்டங்களில் பிராமி எழுத்துக்களும், ஓவியக் குறியீடுகளும் உள்ளதாக கூறப்படுகிறது.  எனவே, தமிழக அரசு தொல்லியல் துறையின் மூலம் உரிய ஆய்வு நடத்தி, தமிழர்களின் நாகரீகத்தை வெளிக்கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version