பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய மூன்று வங்கிகளையும் இணைக்கும் முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. லாபம் ஈட்டும் வங்கிகளுடன், வாராக் கடன் சுமையால் தத்தளிக்கும் வங்கிகளை இணைத்து வரும் உத்தியை மத்திய அரசு பின்பற்றி வருகிறது.
அந்த வகையில் கடன் சுமையில் இருக்கும் தேனா வங்கியை, விஜயா வங்கி மற்றும் பேங்க் ஆப் பரோடாவுடன் இணைத்து ஒரே வங்கியாக்கும் அறிவிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அரசின் இந்த முடிவுக்கு மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன் மூலம் நாட்டின் மூன்றாவது பெரிய வங்கியாக பாங்க் ஆப் பரோடா மாறும். மத்திய அரசின் இந்த முடிவு வாராக் கடன் பிரச்சனைக்கு தீர்வாகாது என்றும், இதனால் நல்ல நிலையில் இயங்கும் வங்கிகள் பாதிக்கப்படும் என்றும் வங்கி ஊழியர்கள் கடந்த மாதம் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.