ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் அமைப்பதற்கான சட்டத்தை அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இத்திட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராடி வரும் நிலையில் நிறைவேற்ற காரணம் என்ன ?
உலகிலேயே தென்னாப்பிரிக்கா என்ற நாட்டிற்கு மட்டுமே 3 தலைநகரங்கள் உள்ளன. நெதர்லாந்து, செக் குடியரசு, சிலி உள்ளிட்ட சில குறிப்பிட்ட சில நாடுகள் இரண்டு தலைநகரங்களை வைத்துள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை ஜம்மு காஷ்மீர் மாநிலம் 2 தலைநகரங்களுடன் செயல்படுகிறது. அம்மாநிலத்தின் கோடை காலத் தலைநகராக ஸ்ரீநகரும் குளிர்காலத் தலைநகராக ஜம்முவும் உள்ளது. இந்த நிலையில் தான் ஆந்திர சட்டப்பேரவையில் 3 தலைநகரங்கள் அமைப்பதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை பிரித்து தனிமாநிலமாக உருவாக்க வேண்டுமென பல ஆண்டுகளாக பெரிய போராட்டங்கள் நடந்து வந்தன. இதைத்தொடர்ந்து, 2014-ம் ஆண்டு ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை பிரித்து தனி மாநிலமாக உருவாக்கும் மசோதா நிறைவேறியது.
10 ஆண்டுகளுக்கு இரு மாநிலங்களுக்கும் ஐதராபாத் தலைநகராக இருக்கும் என்றும், அதற்குள் ஆந்திரா ஒரு தனி தலைநகரத்தை உருவாக்கிவிடவேண்டும் என்றும் சட்டமியற்றப்பட்டது. இதன் அடிப்படையில், அமராவதியில் 1 லட்சத்து 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய தலைநகரை உருவாக்க, அன்றைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பெரும் முயற்சி எடுத்தார். 53 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் புதிய தலைநகரம் உருவாக்க திட்டமிடப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி அபார வெற்றி பெற்றார். முதலமைச்சராக பொறுப்பேற்ற அவர் ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் அமைக்கப்படும் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டார். இந்த முடிவு குறித்து கருத்து கேட்பதற்காக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜி.நாகேஸ்வரராவ் தலைமையிலான குழுவும் ஜெகன்மோகனின் முடிவுக்கு பச்சைக்கொடி காட்டியது.
அதன்படி ஆந்திர சட்டசபையில் 3 தலைநகரங்கள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கர்னூல் நீதிமன்ற தலைநகரமாகவும், விசாகப்பட்டினம் நிர்வாகத் தலைநகரமாகவும், அமராவதி சட்டசபைத் தலைநகராகவும் அமைக்கப்படுகிறது. முக்கிய எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் இத்திட்டத்திற்கு எதிராக போராடி வரும் நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 58 தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மாநிலத்திற்கு 3 தலைநகரங்கள் அமைக்கப்படுவதால் நிர்வாகம் எளிதாகும் என்றும் மாநிலம் முழுவதும் சீரான வளர்ச்சி ஏற்படும் என்றும் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு முந்தைய அரசு திட்டமிட்டதை விட குறைவான நிதியே செலவிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
3 தலைநகரங்களுக்கு இடையேயான தகவல் தொடர்பு, நிர்வாக ஒருங்கிணைப்பு, உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் எதிர்கட்சிகள் சந்தேகங்கள் எழுப்பினாலும், தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் இது சாத்தியன் தான் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். மாநிலத்தின் வளர்ச்சி பரவலாக்கப்படவேண்டும் என்ற நோக்கில் ஜெகன்மோகன் ரெட்டி எடுத்துள்ள முயற்சி வெற்றி பெற்றால், பல மாநிலங்கள் இதை பின்பற்றுவதற்கும் வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.