27 மாவட்டங்களில் தேநீர் கடைகளுக்கு இன்று முதல் அனுமதி

இன்று முதல் வருகிற 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில், டாஸ்மாக் கடைகள் அனுமதி வழங்கப்பட்டு, டீக்கடைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. திமுக அரசின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். டாஸ்மாக்கில் பரவாத கொரோனா, டீக்கடைகளில் பரவுமா ? என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். டீக்கடைகளை திறக்க அரசு அனுமதி தராவிட்டால், இந்த தொழிலை நம்பியுள்ள குடும்பங்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என சென்னை பெருநகர டீ கடை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஆனந்தன் வேதனையுடன் தெரிவித்து இருந்தார். பல்வேறு தரப்பினரின் கண்டனத்தை தொடர்ந்து, டீக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை டீக்கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டீக்கடைகளில் பார்சல் மட்டுமே வழங்கலாம் என்றும், டீக்கடைகளுக்கு அருகே நின்று தேநீர் அருந்த அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், இனிப்பு மற்றும் கார வகைகளை விற்பனை செய்யும் கடைகளுக்கு காலை 8 மணி முதல் 2 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இ-சேவை மையங்களும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தளர்வுகள் அனைத்தும் தொற்று பரவல் குறைவாக உள்ள 27 மாவட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

Exit mobile version