ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இயல்பாக இருதரப்பையும் விசாரித்து கொண்டிருக்கும் போதே, ஆணையம் தங்களுக்கு எதிராக செயல்படுவது போல அப்பல்லோ நினைத்து கொண்டு வழக்கு தொடர்வது அதன் முதிர்ச்சியற்ற தன்மையை பிரதிபலிப்பதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை களைவதற்காக தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்துக்கு தடை விதிக்க கோரி அப்பல்லோ மருத்துவமனை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி, மருத்துவமனை நிர்வாகத்தை கேள்விகள் கேட்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக அவர் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டுவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல என்றும், இது ஆணையத்தின் விசாரணை முறை தான் எனவும், அவர் அப்போலோ மருத்துவமனையை மட்டும் கேள்வி கேட்பதில்லை, அனைத்து தரப்புகளிடமும் தான் கேள்விகள் கேட்கிறார், அது ஆணையத்தின் கடமை என தெரிவித்தார்.
பின்னர், ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேஷ், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்களை களைவதற்காக அமைக்கப்பட்டது தான் விசாரணை ஆணையம் என்கிற போது, ஆணையத்துக்கு ஜெ அவர்களின் மரணம் இயற்கையானதா? அல்லது ஏதேனும் காரணிகள் அதன் பின்னால் உள்ளதா? என்பதில் தொடங்கி,
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் அவர் இறந்த வரை அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் என அனைத்து விவரங்களையும் தீர ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்க ஆணையத்துக்கு முழு உரிமை உள்ளது என்றும் அது ஆணையத்தை தோற்றுவித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் தெளிவாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அவர் மீது எந்த தனிப்பட்ட குற்றச்சாட்டையும் மருத்துவமனை நிர்வாகம் முன்வைக்காத நிலையில், அவர் கேள்வி கேட்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக ஆணையம் தங்களுக்கு எதிராக செயல்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் கருதுவது தேவையற்றது எனவும் சுட்டிக்காட்டினார்.
கிட்டத்தட்ட ஆணையத்தின் 90 சதவிகித வேலைகள் முடியும் தருவாயில் உள்ளதாகவும் இந்த நேரத்தில் இந்த வழக்கு தேவையற்றது எனவும் தெரிவித்த அவர், ஆணையம் யார் மீதும் குற்றம் சொல்லி தீர்ப்பு வழங்கப் போவதில்லை எனவும்,
ஆதாரங்களை திரட்டி விசாரணைகளை மேற்கொண்டு அதன் விவரங்களை மட்டுமே அரசுக்கு வழங்க உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். இந்த வழக்கின் விசாரணையை வரும் 8ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.