தமிழ்நாட்டின் பெருமையை இந்திய அளவிலும், இந்தியாவின் பெருமையை உலக அரங்கிலும் காட்டிய ஆற்றல் மிக்கவரான ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் 90-வது பிறந்தநாள் இன்று…
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமை நினைவு கூர்கிறது இந்த செய்தித் தொகுப்பு..
கடல் கொஞ்சும் தமிழ்நாட்டின் எல்லை மாவட்டமான ராமநாதபுரம், உலகுக்குத் தந்த உயர் கொடையாக வந்தவர், அவுல் பக்கிர் ஜெயினுலாப்தின் அப்துல் கலாம்.
தென்கோடி தமிழகத்தில் தோன்றி, திரும்பும் திசையெல்லாம் இந்தியன் என்ற புகழ்கொடி நாட்டியவர் அப்துல் கலாம்.
தம் வாழ்வில் எடுத்துக்கொண்ட ஒவ்வொரு பொறுப்பையும், அதற்கே உரிய சிரத்தையுடன் செய்த அப்துல் கலாம், தலைசிறந்த மாணவராகவும், மாணவர்கள் தலை வணங்கும் பேராசிரியராகவும் திகழ்ந்தார்.
இருபெரும் தேசிய கட்சிகளின் ஆதரவுடன் குடியரசு தலைவரான அவர், பதவிக்காலம் முடிந்ததும், சாதாரணமாக மீண்டும் பேராசிரியர் பணியைத் தொடர்ந்தவர்.
தூக்கத்தில் வருவது கனவல்ல; நம்மைத் தூங்க விடாமல் செய்வதுதான் கனவு என்று உச்சரித்த அப்துல் கலாமின் மந்திரச் சொற்கள்,
அவரது கனவோடு நின்றுவிடாமல், இன்றும் லட்சக் கணக்கான இளைஞர்களுக்குள் கனவுகளை விதைத்து வெற்றியாக அறுவடை செய்து வருகிறது.
சுதந்திரம் அடையும் முன்பே விடுதலைப் பாடிய பாரதியின் தீர்க்க தரிசனத்தைப் போல், இந்திய நாடு வல்லரசாவதற்கான கனவை மிகவும் தீவிரமாக கண்டவர் அப்துல் கலாம்.
அமைதியின் மறு உருவமாக திகழ்ந்த அப்துல் கலாம், விண்வெளிக்கு விட்ட ஏவுகணைகளின் பட்டியல், உலக வரலாற்றில் பொன் ஏடுகளில் பொறிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அரங்கத்தில் யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று முழங்கி தமிழரின் மாண்பை தலை ஓங்கச் செய்தவர் அப்துல் கலாம்.
அக்னிச் சிறகுகள், இந்தியா 2020, மிஷன் இந்தியா, உள்ளிட்ட புத்தகங்களில் புது மின்சாரத்தை நாட்டுக்குள் பாய்ச்சினார்.
இந்தியாவின் முன்னேற்றத்தைக் கனவாகத் தன் தோளில் சுமந்து, அவற்றை அடுத்த தலைமுறை இளைஞர்கள் தோளில் தரம் குன்றாமல் இறக்கி வைத்த தலைவரை நினைவில் கொண்டு, செயலாற்ற தொடங்கிடுவோம்
நியூஸ் ஜெ செய்திகளுக்காக விவேக்பாரதி